Friday, October 10, 2014

On Friday, October 10, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்தரி வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராக மாபெரும் தொடர் போராட்டங்களை நடத்துவது என்று சேலத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு முடிவு செய்துள்ளது. 
குறிப்பாக போதைப் பழக்கம் மனிதர்களை நடைபிணமாக்கி, வன்முறையையும், சமூக விரோத செயல்களையும் ஊக்குவிக்கிறது. குடும்ப உறவுகளையும், குடும்பப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கிறது. சாலை விபத்துக்களை ஏற்படுத்துகிறது. ஆனால் தமிழக அரசோ இதை வருமானம் ஈட்டும் ஆதாரமாகப் பார்க்கிறது. இந்த குடிப்பழக்கத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஆண்டு இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து வருகிறது.
டாஸ்மாக் கடைகள் பொது இடங்களில் கடைவீதிகள், பள்ளிக்கூடங்கள், ரேசன் கடைகள் அருகே அமைக்கப்படுவதால் பெண்கள், குழந்தைகள் கடும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த போதைப் பழக்கத்துக்கு எதிராக, அக்டோபர்14ம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தவும் மாநில மாநாட்டில் அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை சத்திரம் அருகிலும், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகிலும், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியிலும், குடிமங்கலம் பூலவாடியிலும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும். 
14ம் தேதிக்கு முன்பாக இக்கடைகளை அரசு நிர்வாகம் மூட வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். இதில் மாதர் சங்கத்தினர் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைத்துத் தரப்பு பெண்களையும் அணிதிரட்டி இப்போராட்டத்தை தீவிரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் திருப்பூர் தெற்கு ஒன்றியம் அண்ணாநகர் டாஸ்மாக் கடையை எதிர்த்து அக்டோபர் 15ம் தேதியும், செல்லம் நகர் டாஸ்மாக் கடையை எதிர்த்து 16ம் தேதியும், வேலம்பாளையம் நகரத்திற்கு உட்பட்ட சாமுண்டிபுரம் டாஸ்மாக் கடையை எதிர்த்து 17ம் தேதியும் பூட்டுப் போடும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
இப்போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்கள் ஆதவளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி கூறியுள்ளார்.
-----------

0 comments: