Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    






மதுரை கிருதுமால் நதியின் வழித்தடத்தின் நிலை குறித்து லண்டன் பல்கலை கல்லுாரி ஜெயராஜ் சுதர்சன் மேம்பாடு பிரிவு மாணவர்கள், திட்டப்பிரிவு மற்றும் தானம் அறக்கட்டளை ஆய்வாளர் கனகவள்ளி ஆகியோர் 26 பக்க அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாகமலையின் மேற்குப்பகுதியில் 5 ஊற்றுகளில் இருந்து கிருதுமால் நதி உற்பத்தியாகி மதுரை நகர் வழியே 15 கி.மீ., பாய்ந்து வைகை ஆற்றில் கலந்தது. இந்த நதி முன்பு 'நாராயண காவிரி' என்று அழைக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் இந்நதியில் ஆண்டுக்கு 11 மாதங்கள் நீர் சென்றது. அந்த நீர் நல்ல நீர். வைகை ஆற்றின் உபரிநீர் துவரிமான் கண்மாய்க்கு வந்து, கிருதுமால் நதியில் கலந்தது. அதே போல விவசாய நிலங்களின் நீரும் இந்நதிக்கு வந்தது. கண்மாய்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டதால் அனைத்து கண்மாய்களுக்கும் நீர் சென்றது. திருமலை நாயக்கர் மகால் அகழிகளுக்கு இந்நதியில் இருந்தே நீர் சென்றது. 20 முதல் 30 அடி அகலத்தில் கிருதுமால் நதி இருந்தது. கரையின் இரு புறங்களிலும் தாழம்பூ அடர்ந்து வளர்ந்திருந்தன. இந்நீரை குளிக்க, துவைக்க, விவசாயத்திற்குபயன்படுத்தினர். வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது உபரி நீர் இந்நதிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் வெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டது.

1970ம் ஆண்டுக்கு பின் கிருதுமால் நதியில் மாற்றம் ஏற்பட்டது. வரத்து நீர் குறைந்தது. ஊற்றுகளில் இருந்து வரும் நீரும் குறைந்தது. காலப்போக்கில் இந்நதியின் கரையோரம் ஏற்பட்ட குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகளால் நதி சுருங்கியது. இந்நதிக்கு வந்த தண்ணீரை நிலையூர் வாய்க்காலுக்கு திருப்பியதால் வறண்டது. முன்பு வைகை ஆற்றுப்படுகை கிருதுமால் நதியை விட உயர்ந்து இருந்தது. மணல் கொள்ளையால் வைகை படுகை 3 மீட்டர் ஆழத்திற்குச் சென்றது. இதனால் வைகை ஆற்றின் உபரிநீர் கிருதுமால் வாய்க்காலுக்குள் நுழைய முடியமுடியவில்லை. இந்நதியின் வழிநெடுக அச்சம்பத்து, விராட்டிப்பத்து, திடீர்நகர், மேலவாசல் பகுகளில் குடியிருப்பு கழிவுகள் இந்நதிக்குள் விடப்படுகின்றன. குப்பைகளும் கொட்டப்படுகின்றன. சாக்கடைகளின் சங்கமமாக இந்நதி மாறி விட்டது.

சீர்படுத்த வழிமுறைகள்:
கிருதுமால் நதிக்கு தண்ணீர் தரும் துவரிமான், மாடக்குளம் கண்மாய்களை சீர்செய்ய வேண்டும். மழைக்காலங்களில் நிலையூர் கால்வாய் நீரை இந்நதிக்கு திருப்பிவிட வேண்டும். இப்படி செய்தால், கழிவுகள் அகற்றப்பட்டு நிலத்தடி நீர் உயரும். வைகை ஆற்றில் மணல் கொள்ளை உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதுரை நகரில் உள்ள மழை நீர் வாய்க்கால்களை கிருதுமால் நதியுடன் இணைத்து, மழை நீரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.மழை நீர் கால்வாய்களில் கழிவு நீர் கலப்பு தடுக்கப்பட வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை மத்தியஅரசு, நகர்புற மேம்பாட்டுத்துறை, மதுரை மாநகராட்சி ஆகியவற்றிற்கு அனுப்பபட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன் கிருதுமால், வைகை ஆற்று மேம்பாடு குறித்து மதுரையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நதி சீரமைக்கப்பட்டால் மதுரை நகரின் நிலத்தடி நீர் மேம்படும். மாநகராட்சியும், மாநில அரசும் மனது வைக்குமா?

0 comments: