Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பணப்பயனை நிலுவையைக் கணக்கிட்டுச் சொல்வதற்கே நிர்வாகத்தில் லஞ்சம் கேட்கும் அவலநிலை உள்ளது.
இதைக் கண்டித்தும், அந்த தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சியில் 800க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோருக்கு 2014 ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (சரண்டர்) ஊதியம் வழங்கப்படவில்லை. இத்தொழிலாளர்களின் பணிப்பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தகுதி படைத்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேர்வு நிலை ஊதிய நிர்ணய நிலுவைத் தொகை, சிறப்புநிலை ஊதிய நிர்ணய நிலுவைத் தொகை இதுவரை கணக்கிட்டு வழங்கப்படவில்லை.
இத்துடன் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடில்லாமலும், வசிக்கும் வீடுகளுக்கும் பட்டா இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே மேற்கண்ட பணப்பயன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வுகளைக் கணக்கிட்டு வழங்க வேண்டும், பணிப்பதிவேடுகளைப் பராமரிக்க தனி அலுவலர் நியமித்து முறையாகப் பராமரிக்க வேண்டும், தென்னம்பாளையம் காலனி, அரண்மனைப் புதூர், அனுப்பர்பாளையம் துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும், அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
துப்புரவுத் தொழிலாளர் சங்க திருப்பூர் கமிட்டித் தலைவர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனைச் சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் எம்.அசோகன் தெரிவித்தார். இதனால் உடனடியாக ரூ.25 லட்சம் இத் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதர கோரிக்கைகள் குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்களைக் கொண்டு கூட்டம் நடத்தவும் ஆணையர் ஏற்பாடு செய்தார்.
இத்தொழிலாளர்களின் வீட்டுமனைப் பட்டா கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்ததாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.

0 comments: