Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்க, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments: