Monday, November 24, 2014

On Monday, November 24, 2014 by farook press in ,    
திருப்பூர் 20வது வார்டு நஞ்சப்பா நகரில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை மாநகராட்சி நிர்வாகம் குப்பை வண்டிகளை நிறுத்துவதற்காக பயன்படுத்தி வருகிறது. இந்த சமுதாயக்கூடத்தை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏழை, எளிய பொது மக்கள், பனியன் தொழிலாளர் உள்ளிட்ட உழைப்பாளிகள் குடும்பங்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தனியார் மண்டபங்களை வாடகைக்குப் பிடிப்பதென்றால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து பல ஆயிரம் வரை செலவாகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகை வசூலிக்கும் வகையில் சமுதாயக்கூடம் நஞ்சப்பா நகரில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது குப்பை வண்டிகளை நிறுத்துவதுடன், அந்த இடமே பெரிய குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
எனவே இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப புதுப்பித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வாலிபர் சங்க சக்திநகர் கிளை தலைவர் எம்.தங்கராம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தங்கராஜ், நிர்வாகி என்.பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், கருணாகரன் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் எம்.எம்.நடராஜ் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். முதல் நாளில் நானூறு பேரிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்த வாரம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு டிசம்பர் 2ம் தேதி திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மனுக் கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: