Tuesday, November 11, 2014

On Tuesday, November 11, 2014 by farook press in ,    
வறுமை, வேலையின்மை ஒழிப்புப் போராட்டத்துடன் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை இணைத்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
திருப்பூர் எம்.எஸ்.நகரில் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லஞ்ச ஊழல் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது: ஜெயலலிதா நீதிமன்றத் தீர்ப்பினால் தண்டிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் அதிமுகவினர் அரங்கேற்றும் கூத்துக்கள் திராவிட இயக்கம் பண்பாட்டுரீதியாக எந்த அளவுக்கு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. திமுகவும் இந்த ஊழல் பற்றி வாய்த் திறக்கவில்லை.
அன்னா ஹசாரே தலைமையில் லஞ்ச ஊழலுக்கு எதிராக நாட்டில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. லோக்பால் சட்டம் நிறைவேற்றினால் மட்டும் லஞ்ச ஊழலை ஒழித்துவிட முடியாது. பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை கொண்டு வருவோம் என்றனர். ஆனால் உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகு கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை பாஜக அரசு சமர்ப்பித்தது.
நாட்டின் உயர்மட்டத்தில் இருந்து அனைத்து மட்டங்களிலும் ஊழலுக்கு காரணமான எல்லா ஓட்டைகளையும் அடைக்க வேண்டும். 
முதலாளித்துவ தாராளமயக் கொள்கைதான் லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. வெறுமனே ஊழலை எதிர்த்துப் போராட முடியாது. நாட்டில் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கான போராட்டத்துடன் ஊழல் எதிர்ப்புப் போராட்டமும் இணைந்திருக்கிறது. எனவே லஞ்ச, ஊழலை ஒழிக்க அடிப்படை கொள்கைரீதியாக வேலையின்மை, வறுமை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்று உ.வாசுகி கூறினார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சுப்பராயன் பேசினார். அப்போது, தனிப்பட்ட நபர்களின் மீது விறுப்பு வெறுப்பு, விரோதத்தின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடவில்லை. அப்பழுக்கற்ற அரசியலை நடத்தக்கூடியவர்கள் இடதுசாரிகள். இன்று நாட்டை ஆளும் பாரதிய ஜனதா அரசு மிகவும் ஆபத்தான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த கட்சியை வழிநடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். சகிப்புத்தன்மையற்ற இந்து வெறி பிடித்த அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணியும் கறுப்பு தொப்பி, இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி அணிந்த தொப்பியாகும். அவர்கள் வலதுகையை நெஞ்சுக்கு நேராக மடக்கி  வணக்கம் செலுத்துவது நாஜி ஹிட்லரின் முறையாகும். சகிப்புத்தன்மையற்ற இந்த சக்திகளை எதிர்த்து இறுதிமூச்சு வரை கம்யூனிஸ்ட்டுகள் சமரசமின்றி போராடுவார்கள் என்றார்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ், இ்நதிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சி.பழனிசாமி, மேற்கு வட்டார துணைச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
ஏராளமான பெண்கள் உள்பட பெருந்திரளானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

0 comments: