Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    
திருப்பூர் அவினாசி ரோடு ஆசர் மில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(வயது 43). இவர் அவினாசி ரோட்டில் நகை அடகு கடை வைத்து கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவரிடம் குமார் நகர், காந்திநகர், அனுப்பர்பாளையம், பிச்சம்பாளையம், திருநீலகண்ட புரம் போன்ற பகுதியைச் சேர்ந்த சுமார் 1,500–க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர்.
பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை அவர்களுக்கு தெரியாமல் கணேசன், அடகு கடை மற்றும் நிதி நிறுவனங்கள் என 4 இடங்களில் வைத்து அதிக பணம் பெற்றார். இதனால் பொதுமக்கள் தாங்கள் வைத்த அடகு நகையை கணேசனிடம் இருந்து மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் கணேசனை போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். கணேசன் அளித்த தகவலின் பேரில் 4 நிதி நிறுவனங்களில் இருந்து 49¼ கிலோ நகையை போலீசார் மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.9 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.
குழு அமைப்பு
இந்தநிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் குழு அமைத்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் முழு விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. நேற்று மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகை அடகு வைத்ததற்கான உரிய ஆவணங்கள், அவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் உறுதி மொழி படிவம் ஆகியவற்றை அளித்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:–
அடகு கடை உரிமையாளர் கணேசன், 4 நிதி நிறுவனங்களில் அடகு வைத்திருந்த 6 ஆயிரத்து 152 பவுன் நகைகளை சட்ட வரன்முறைக்கு உட்பட்டு போலீசார் மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களையும், நகைபற்றிய விவரங்களையும் தீவிரமாக சேகரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வைத்துள்ள நகைக்கான தொகையை வட்டியுடன் இந்த குழுவிடம் செலுத்தி அவரவர் நகைகளை பெற்றுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: