Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்தநாள், திருமண நாள், காதலர் தினம் உள்ளிட்ட தினங்களில் நண்பர்கள், உறவினர்கள் என ஒருவருக்கொருவர் கடிதங்கள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மூலமும் வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் சில வருடங்களுக்கு முன்வரை வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் அந்த நிலமை தற்போது வழக்கத்திற்கு மாறாக தலைகீழாக மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சியும் காலத்தின் வேகமுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களிடையே கூட தற்போது கடிதம் எழுதும் பழக்கமோ, வாழ்த்து அட்டை வழங்கும் பழக்கமோ இல்லை. இன்றைய தலைமுறையினர் வாழ்த்து அட்டை என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு மாறிவிட்டது. காலம் செல்ல செல்ல வாழ்த்து அட்டைகள் கண்காட்சிக்காக வைக்கப்படும் நிலைக்கு மாறிவிடும் என்பதில் மாற்றம் இல்லை. சிறு வயது முதலே செல்போன் மூலம் குறுஞ்செய்தி, இன்டர்நெட், இ–மெயில், முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலை தளங்களில் மூழ்கி கிடக்கும் இளைய சமுதாயத்தினர் கடிதம் எழுதுதல், வாழ்த்து அட்டை அனுப்புதல் ஆகியவற்றை பண்டைய கால சின்னமாகவே பார்க்கின்றனர். வாழ்த்து தெரிவிப்பது மட்டுமின்றி தன் காதலை தெரிவிக்கும் காதலர்கள் கூட ஒரு கட்டத்தில் கடிதம் மூலமாகவும், வாழ்த்து அட்டை மூலமாகவும் காதலை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருப்பது அறிவியல் வளர்ச்சியை மட்டும் இன்றி பழமையின் மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைகிறது. வாழ்த்து அட்டையை தேடி அலையும் ஒரு சிலர் கடைகளில் சென்று வாழ்த்து அட்டை குறித்து கேட்டாலே கடை ஊழியர்கள் கூட அலட்சியமாக பார்க்கும் நிலை தற்போது காணப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பண்டிகை தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் வாழ்த்து அட்டைகள் வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளது. இந்த நிலை திருப்பூர் மாவட்டத்திலும் காணப்படுகிறது. இதனால் திருப்பூரில் உள்ள கடைகளிலும் வாழ்த்து அட்டைகளின் வரத்து அடியோடு நின்று விட்டதாகவும், இந்த வாழ்த்து அட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது:– நான் தொடர்ந்து பல வருடங்களாக பண்டிகை காலங்களில் நண்பர்கள் உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வருகிறேன். கடிதம் எழுதுதல், வாழ்த்து அட்டை அனுப்புதல் என்பது தமிழரின் அடையாளம். ஆனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கூட இங்கு உள்ள பல கடைகளில் வாழ்த்து அட்டை விற்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது திருப்பூர் மாநகரில் ஒன்று, இரண்டு கடைகளில் தான் வாழ்த்து அட்டை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த அட்டைகளும் புதுமையானதாக இல்லை. மேலும் விலையும் அதிகமாக இருக்கிறது. இதனால் அட்டை வாங்கும் எண்ணமே போய்விட்டது. வாழ்த்து அட்டை கேட்டு கடைகளுக்கு சென்றால் கடை ஊழியர்களும் என்னை மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.
தற்போது உலகம் அறிவியம் மயமாக மாறிவிட்டது. கடிதத்தையோ அல்லது வாழ்த்து அட்டைகளையோ விலை கொடுத்து வாங்கி அதில் தங்களுடைய கருத்துகளை பதிய வைக்கும் அளவுக்கு யாரும் இல்லை. எதிலும் வேகம் என்ற நிலையை நோக்கியே தற்போதைய தலைமுறையினர் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் வாழ்த்து அட்டைகள் தயாரிப்பிலும் முடங்கி போய் கிடக்கிறது. முன்பெல்லாம் காதலர் தினம், பண்டிகை காலங்கள் என்றாலே கடைகளில் வாழ்த்து அட்டை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் அந்த நிலை மாறி வாழ்த்து அட்டைகளை யாரும் வாங்குவதும் இல்லை. கடைகளில் அவற்றில் வரத்தும் குறைந்து விட்டது. கணினி மயமான உலகில் அனைத்தும் கணினி என்ற நிலையை அடைந்து விட்டது. இதிலேயே தங்களுடைய வாழ்த்துக்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கின்றனர். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டை, கடிதங்கள் இன்றளவும் என்னிடம் அவர்களின் நினைவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய கணினி செயல்பாடுகளை நினைவு சின்னங்களாக பாதுகாத்து வைப்பது என்பது இயலாத காரியம். இதனால் பழமை என்றும் பழமை தான் என்றார்.
உணர்ச்சிகளையும், உண்மையின் வெளிப்பாடுகளையும் அதிகமாக வெளிப்படுத்துவதில் கடிதமும், வாழ்த்து அட்டைகளும் முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில் தற்போது இதன் மறைவு பல நவநாகரீகத்தை விரும்பாதவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனையும் தாண்டி பழைய பழக்க வழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

0 comments: