Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது.
முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடி, கொடிமரம், தியாகிகள் நினைவு ஜோதிகளை ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் உள்ள வி.பி.சிந்தன் நினைவகம் முன்பிருந்து கொடியம்பாளையத்தில் தோழர் என்.ஆறுமுகம் நினைவரங்கத்திற்கு செந்தொண்டர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழியில் பட்டாசுகள் வெடித்து, தாரை தப்பட்டை முழக்கத்துடன் இந்த ஊர்வலம் உற்சாகமாகச் சென்றது.
மாநாட்டு வளாகத்தில் தோழர் எஸ்.பி.கந்தசாமி நினைவு கொடிமரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமியும், உடுமலை உஸ்மான் நினைவு செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியமும், தியாகி கே.ரத்தினசாமி நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தியும், தியாகி ஆஷர் மில் பழனிசாமி நினைவு ஜோதியை கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமியும், தோழர் சீராணம்பாளையம் தியாகி பழனிச்சாமி நினைவு ஜோதியை மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரியும், தியாகி பன்னீர்செல்வம் நினைவு கொடிக் கயிற்றை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணனும் உணர்ச்சிகரமான முழக்கங்களுக்கு இடையே பெற்றுக் கொண்டனர். 
இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் அங்கு கூடியிருந்த கட்சி அணியினரின் கம்பீரமான உணர்ச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே செங்கொடியை ஏற்றி வைத்தார்.
தியாகிகள் நினைவு தூணுக்கு தலைவர்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு தொடங்கியது. எம்.ராஜகோபால், வெ.ரங்கநாதன், லட்சுமி, டி.குமார் ஆகியோர் மாநாட்டு தலைமைக்குழுவாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக்குழுத் தலைவர் செ.நடேசன் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டின் பல்வேறு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதையடுத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கையை முன்மொழிந்தார். இம்மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திங்களன்று பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. செவ்வாயன்று மாநாட்டின் நிறைவாக ஊத்துக்குளியில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., உள்பட மாவட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
இம்மாநாட்டை முன்னிட்டு ஊத்துக்குளி மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் செங்கொடிகள், செந்தோரணங்கள், பதாகைகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. வரவேற்புக்குழுவினர் மாநாட்டுப் பணிகளை முனைப்புடன் மேற்கொண்டிருந்தனர்.







0 comments: