Thursday, December 04, 2014

On Thursday, December 04, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 2 நகராட்சி மற்றும் 8 ஊராட்சிகளில் பணியாற்றிடும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு சொற்பக் கூலியே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நியாயமான ஊதியம் நிர்ணயித்து வழங்கிட வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் நகரம் மாநகராட்சியாக மாறி ஐந்தாண்டு காலம் ஆகிறது. அப்போது வேலம்பாளையம், நல்லூர் ஆகிய இரு நகராட்சிகளும், சுற்றிலுமுள்ள 8 ஊராட்சிகளும் மாநகர எல்லைக்குள் இணைக்கப்பட்டன. மேற்கண்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 184 குடிநீர் பணியாளர்கள், 34 துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் 5 ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சியாக மாறிவிட்ட நிலையிலும் கடந்த காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் அடிப்படை மாற்றம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.65 என்ற அளவில் மாதம் ரூ.2 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. 
அதுவும் முந்தைய உள்ளாட்சிகளில் அவர்கள் பகுதி நேர வேலை போக வேறு வேலைகள் செய்யும் நிலை இருந்தது. ஆனால் மாநகராட்சியாக மாறிய பிறகு நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக வேலை வாங்கப்படுவதுடன், வரி வசூல் பணிக்கும் அதிகாரிகள் இந்த ஊழியர்களை பயன்படுத்துகின்றனர். ஒரு ஊழியருக்கு நாளொன்றுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் அளவுக்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இத்தகைய நெருக்கடியான நிலையில் வாழும் இந்த தொழிலாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தி ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மேற்படி 223 தொழிலாளர்களும் மாநகராட்சி ஊழியர்களாக தகுதி உயர்த்தப்பட்டனர். எனினும் ஊதிய உயர்வு குறித்து அறிவிக்கப்படவில்லை. திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.தங்கவேல் தலைமையில் சிஐடியு நிர்வாகிகள் சென்னை சென்று மூன்று முறை மாநில அமைச்சர்களை சந்தித்து முறையிட்டும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே இந்த ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சார்பில் டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் வாழ்த்திப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் இ.பி.ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் உள்ளாட்சி ஊழியர்களின் குடும்பத்தினர் உள்பட ஐநூறு பேர் பங்கேற்றனர். மாலையில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். 
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

0 comments: