Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by farook press in ,    
பல்லடம் ரோட்டில் பழைய பஸ் நிலையமும், பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ்நிலையமும் அமைந்துள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு தொழில் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள். திருப்பூருக்கு வரும் இவர்கள் புதிய, பழைய பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் மூலம் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு செல்கிறார்கள். உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லாமல் புரோக்கர்களை நம்பி திருப்பூருக்கு வரும் தொழிலாளர்கள் நிலை திண்டாட்டம்தான்.
இதைத்தவிர கள்ளக்காதல் ஜோடிகள், குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாய் இருப்பவர்கள், வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூரை வந்தடைகின்றனர். இவர்களை கண்காணிப்பதற்காகவே ஒரு சிலர் பஸ் நிலையங்களில் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் இளம் வயது பெண்கள், விதவைகள், சிறுமிகளை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி தங்கள் வலையில் விழ வைத்து விடுகின்றனர். பின்னர் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று வீடு கொடுத்து தங்கவைத்துக்கொள்கின்றனர். நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி ஓரிரு நாட்களுக்குள் அவர்களை விபசாரத்தில் தள்ளி விடுகின்றனர். தன் உறவுக்கார பெண் ஒருவரை நம்பி திருப்பூர் வந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.
இது குறித்து புதிய பஸ் நிலையத்தில் கடை வைத்து நடத்தி வரும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:–திருப்பூர் நகருக்கு வரும் பலர் இந்த நகரத்தை பற்றி தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி திருப்பூருக்கு வரும் பல பெண்கள் விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ விபசாரம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த பெண்கள் இரவு நேரங்களில் தங்களை அழகிகளாக காட்டிக்கொண்டு புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் வலம் வருகிறார்கள். இவர்கள் முக்கியமாக வசதி படைத்த ஆண்களையும், இளைஞர்களையும்தான் தங்கள் வலையில் விழவைத்து முதலில் அவர்களிடம் அறிமுகமாகிக்கொண்டு பின்னர் புரோக்கர்களின் உதவியுடன் பேரம் பேசி விபச்சாரத்துக்கு அழைத்து செல்லுகின்றனர். இந்த தகவல் தெரிந்த போலீசார் ரோந்து வந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும், மீண்டும் அவர்கள் வெளியில் வந்து விபசாரத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் பல ஆண்கள் தங்களிடம் இருந்த பணத்தை இழந்து விட்டு பின்னர் நண்பர்களின் உதவியுடன் வீட்டிற்கு செல்லும் நிலையும் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது.அதிலும் புதிய பஸ் நிலையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்துவிட்டு போதையுடன் வரும் குடிமகன்கள் நள்ளிரவு நேரங்களில் பஸ்நிலைய வளாகத்திலேயே அழகிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி விட்டது. தொழில் தேடி வரும் சில ஆண்கள் இந்த அழகிகளின் மேல் மோகம் கொண்டு தங்கள் பணத்தை எல்லாம் செலவழித்து பெரும் குடிமகன்களாகி போனதுதான் மிச்சம்.இதனால் பஸ் நிலையங்களில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் சுகாதாரம் என்பது பஸ் நிலையங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தால் புதிய பஸ் நிலையத்தில் போதிய கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. திறந்த வெளியையே கழிப்பறையாக பலர் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்படுகிறது. பெரும்பாலான நாட்களில் பஸ் நிலையங்களில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பறையும் மூடிய நிலையிலேயே காணப்படுகிறது. பெண்களுக்கென தனி கழிவறை வசதி இல்லாத நிலை உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ஜேப்படி மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களும் அதிகமாக நடைபெறுகிறது. இதனால் பெண் பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் அழகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ள திருப்பூர் பஸ்நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: