Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by Unknown in ,    
தாராபுரம் அருகே இரு கிராமங்களை இணைக்கும் வகையில் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட தமிழக அரசு ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
 திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை சாலையில் அமைந்துள்ளது கள்ளிவலசு கிராமம். இந்தக் கிராம மக்கள், சுற்றுவட்டார கிராமங்களான காங்கயம்பாளையம், செலாம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமராவதி ஆற்றின் அக்கரையில் உள்ள முருகன்வலசு கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில், தாராபுரம் வந்து அங்கிருந்து அலங்கியம் வழியாகத் தான் செல்ல முடியும்.
 இதேபோல் காரத்தொழுவு வழியாக கணியூர், கடத்தூரை கடந்து முருகன்வலசுக்குச் செல்ல மற்றொரு வழி உண்டு.
 இந்த இரு வழிகளில் எந்த வழியில் சென்றாலும் முருகன் வலசுக்குச் செல்ல குறைந்தபட்சம் 35 கி.மீ. தூரம் வரை பயணிக்க வேண்டும்.
 அருகில், அருகில் உள்ள முருகன்வலசு, கள்ளிவலசுக்குச்  செல்ல முடியாமல் இருகிராம மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
 இதனால், அமரவாதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருகிராம மக்களும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட தமிழக அரசு, ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தற்போது, ஆற்றின் குறுக்கே 150 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான மண் பரிசோதனை நிறைவுற்று கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முருகன்வலசு, கள்ளிவலசு கிராம மக்கள் கூறியதாவது:
 இரண்டு கிராம மக்களும் வருமானத்தின் பெரும் பகுதியை பேருந்திற்கே செலவிட்டு வந்தோம். செலவினம் கருதி ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் செல்ல முயன்ற 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பரிசல் மூலம் சென்று வந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பரிசலும் இயக்கப்படுவதில்லை. தற்போது பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
 பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் பாலம் கட்டுவதற்கான பணி துவங்கப்படவுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் இரு கிராமங்கள், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றனர்.

0 comments: