Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகில் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பல்லடம் நகரம், கேத்தனூர், செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, பொங்கலூர், கோடங்கிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இடம் வாங்குவது மற்றும் விற்பது, வில்லங்கச் சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்த கோவை, வடவள்ளியைச் சேர்ந்த பாபு என்பவர் சமீபத்தில் திருப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு வழிகாட்டி சார்பதிவாளராக இடமாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை கூடுதல் தலைவர் முருகையா தலைமையிலான அதிகாரிகள் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் கணக்கு தணிக்கை மேற்கொண்டனர்.
அதில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 282 பத்திரப் பதிவுகளில் நிலமதிப்பு குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அரசுக்கு ரூ. 65 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய சார்பதிவாளர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவுத்துறை கூடுதல் தலைவர் முருகையா உத்தரவிட்டார். மேலும் நிலமதிப்பு குறைவாக கணக்கிடப்பட்டு பத்திரப்பதிவு செய்த 282 பேருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் கூறியது:
2011-ஆம் ஆண்டு அப்போதைய மதிப்பிற்கு பத்திரம் வாங்கி கிரையம் செய்தோம். ஆனால் தற்போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்று பத்திரப் பதிவு துறையினர் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திலும் மாதம் தோறும் கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டும். அப்படி செய்திருந்தால் இது போன்ற தவறுகள் அப்போதே கண்டுபிடிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்த்திருக்கலாம். இப்போது திடீரென்று பணத்தை கட்ட சொல்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பத்திரப் பதிவு துறை அதிகாரி ஜெகதீஸ், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

0 comments: