Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஒசூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனி செல்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஈரோட்டிலிருந்து அரச்சலூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்வர். பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் நாள்களில் ஈரோடு-பழனி மார்க்கத்தில் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கிடையே தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல, அதிகளவிலான வாகனப் போக்குவரத்தினால் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு காங்கயம் அருகே ஊதியூரை அடுத்துள்ள நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக தாராபுரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக பாதயாத்திரை பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பு இந்த சாலையின் பல்வேறு இடங்கள் மண் சாலையாக இருந்ததால், பக்தர்கள் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாமல் இருந்தது.
தற்போது, தார்ச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் இந்த புதிய சாலையில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாதயாத்திரை பக்தர்கள் கூறுகையில், புதிதாகப் போடப்பட்டுள்ள இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் இல்லை என்பதால், பாதயாத்திரை பக்தர்கள் கவலையின்றி நடந்து செல்ல முடிகிறது. மேலும், பயண தூரமும் குறைந்துள்ளது. அடுத்தாண்டு, இன்னும் பெரும்பாலான பக்தர்கள் இந்த சாலை வழியாக பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
இப்புதிய சாலை வழியாக பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதால், நொச்சிப்பாளையம்-தாராபுரம் பிரதான சாலையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர். விபத்து அச்சமின்றி பக்தர்களும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

0 comments: