Tuesday, January 13, 2015

On Tuesday, January 13, 2015 by Unknown in ,    
காய்ச்சல் இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்: மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆனையூர், குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஆனந்தம் நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கதிரவன் இன்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.
இந்த பணியில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ‘அபேட்’ மருந்து தெளிப்பவர்கள், அம்மா திட்டப்பணியாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘அபேட்’ மருந்து தெளித்தல், கொசு புகை அடித்தல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது மாநகராட்சி மருத்துவ மனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி மற்றும் தகுதியில்லாதவர்களிடமோ, தன்னிச்சையாகவோ மருத்துவம் பார்க்க வேண்டாம். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்து வாங்க வேண்டாம். மருந்து கடைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து– மாத்திரைகள் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் குணாளன், சுகாதார ஆய்வாளர் கோபால், சந்திரமோகன், மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: