Friday, January 23, 2015

On Friday, January 23, 2015 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில் வீட்டு வரி வசூலித்ததற்கு முறையாக வழங்க வேண்டிய முத்திரையிட்ட கணினி ரசீதுக்கு பதிலாக தற்காலிக ரசீது என்ற பெயரில் எவ்வித முத்திரையும் இல்லாத "கேஸ் மெமோ"வை மாநகராட்சி ஊழியர்கள் வழங்குகின்றனர்.
மிகப்பெரிய முறைகேட்டுக்கு வழி வகுக்கும் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2014 - 15 நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வீட்டு வரி, குடிநீர் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்து வரி இனங்களுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வரி செலுத்தக் கோரும் கேட்பு (நோட்டீஸ்) அறிக்கை வழங்கி வருகின்றனர். அத்தோடு அப்போதே பணம் கொடுத்தால் அதையும் மாநகராட்சியில் செலுத்தி ரசீது வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே பொது மக்களும் வரித் தொகையை அந்த ஊழியர்களிடம் செலுத்துகின்றனர்.
ஆனால் அப்படி பெறப்படும் தொகைக்கு ஊழியர்கள் கேஸ் மெமோவை வழங்கி வருகின்றனர். இந்த கேஸ் மெமோவில் மாநகராட்சி நிர்வாகத்தின் முத்திரையோ, வரி வசூலிப்பு என்பதற்கான எவ்வித குறிப்பும் இல்லை. மளிகை கடைகளில் வழங்கப்படும் இது போன்ற கேஸ் மெமோவை யார் வேண்டுமானாலும் கையெழுத்து இட்டு வழங்க முடியும். 
ஒவ்வொரு குடும்பத்தாரும் சொத்து, குடிநீர் வரியாக ஆயிரக்கணக்கில் பணம் செலுத்துகின்றனர். அதற்கு தற்காலிக ரசீது என இந்த கேஸ் மெமோவை கொடுத்துச் சென்றால், இவர்கள் கொடுத்த பணம் முறையாக மாநகராட்சி கருவூலத்திற்கு போய்ச் சேருகிறதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வரியை வசூலித்துச் செல்வோர் இந்த பணத்தை முறைகேடு செய்துவிட்டு, மக்கள் பணம் கொடுக்கவில்லை என்று சொன்னாலும் ஒன்றும் செய்ய முடியாது. 
மாநகரெங்கும் பல்வேறு பகுதிகளிலும் இது போல் கேஸ் மெமோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை மோசடிக்கு வழி வகுக்கக் கூடியதாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் இது போன்ற கேஸ் மெமோக்கள் ரசீதுகளாக வழங்கப்படுவது மிகப்பெரும் முறைகேட்டிற்கு வழி வகுக்கும். திருப்பூர் போன்ற தொழில் நகரில் தொடர் வசூல் மோசடி செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய அதிகாரியின் கையொப்பச் சான்றுடன் மாநகராட்சியால் அச்சிடப்பட்ட ரசீது வழங்க வேண்டும்.
மேலும் தவறான நபர்கள் மக்களிடம் வசூலில் ஈடுபடுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் வசூலுக்கு வரும் ஊழியர்கள் அடையாள வில்லை (ஐ.டி.கார்டு) அணிந்து வர வேண்டும். அத்தோடு அதிகாரப்பூர்வ ரசீது இல்லாமல் பொது மக்களிடம் வரி தொகையை செலுத்த வேண்டாம் என்ற அறிவிப்புச் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் என்.கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகராட்சி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையால் வளர்ச்சிப்பணிகள் செய்ய முடியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.9 கோடி வரை பணம் தராமல் நிற்கிறது. வரி வசூல் நடந்தால்தான் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆனால் வரிப்பணமும் இது போன்ற அலட்சிய நடவடிக்கைகளால் மாநகராட்சிக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே இந்த நடவடிக்கையை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

0 comments: