Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் விலையை விட விமானத்துக்கான எரிபொருள் (ஏடிஎப் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல்) விலை குறைந்துள்ளது.
சாதாரண பெட்ரோலுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு அதிகரித்ததே விலை உயர்வுக்குக் காரணமாகும்.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.58.91 ஆக உள்ளது. அதேசமயம் விமான எரிபொருள் விலை ஒரு லிட்டர் ரூ.52.42 ஆகும்.
விமானங்களுக்கான பெட்ரோல் அதிகம் சுத்திகரிக்கப் பட்டதாகும். பொதுவாக சாதாரண அதாவது கார், மோட்டார் சைக்கிள்களுக்கான பெட்ரோல் விலையைக் காட்டிலும் விமான எரிபொருள் விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் இப்போதுதான் முதல் முறையாக சாதாரண ரக பெட்ரோல் மீது அதிகபட்ச உற்பத்தி வரி விதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் 4 முறை பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியது. மொத்தம் ஒரு லிட்டருக்கு ரூ.7.75 உயர்த்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்தி வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.16.95 ஆக உள்ளது.
ஏப்ரல் 2002-ல் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.10.53 ஆக இருந்தது. இது 2005-ம் ஆண்டு ரூ.14.59 ஆக உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டில் வரி அதிகபட்சமாக ரூ.14.78 என்ற நிலையை எட்டியது. பின்னர் 2012-ம் ஆண்டில் ரூ.9.48 ஆகக் குறைக்கப்பட்டது.
2010-ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கட்டுப்பாடு விலக்கப்பட்டது. இதனால் சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த தால் கடந்த ஓராண்டில் 9 முறை பெட்ரோல் விலை குறைக்கப் பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு ரூ. 14.69 குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் லிட்டருக்கு ரூ.1.50 உற்பத்தி வரி விதிக் கப்பட்டது. டிசம்பர் 2-ம் தேதி லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்தப்பட்டது. ஜனவரி 2 மற்றும் ஜனவரி 16-ம் தேதி களில் லிட்டருக்கு தலா ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.
பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அரசு உற்பத்தி வரியை உயர்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ.94,164 கோடி வருமானம் கிடைத்தது. மொத்த உற்பத்தி வரி வசூலில் இது 52 சதவீதமாகும். உற்பத்தி வரி கூடுதலால் நடப்பு நிதிஆண்டில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி வரியானது அடிப்படை வரி ரூ.8.95, சிறப்பு உற்பத்தி வரி ரூ.6 மற்றும் கூடுதல் உற்பத்தி வரி ரூ.2 என லிட்டருக்கு வசூலிக்கப்படுகின்றன.
விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8 சதவீதமாக உள்ளது

0 comments: