Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
திருப்பூரில் 750 புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார் வெள்ளியங்காடு பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, தாராபுரம் ரோட்டில் வெள்ளியங்காடு 60 அடி ரோடு சந்திப்பில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சிறிய மஞ்சள் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் திருப்பூர் அரண்மனைப்புதூர் பகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயனின் மகன் மணிகண்டன்(வயது 19) என்பதும், திருட்டு சி.டி.க்களை விற்றுவருவதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையில் 150 புதுப்படங்களின் சி.டி.க்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளியங்காடு பகுதியில் சரவணக்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து ஐ, லிங்கா, ஆம்பள, கயல், வெள்ளக்காரதுரை உள்பட 600 புதுப்பட சி.டி.க்கள், 10 ஆபாசபட சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதைதொடர்ந்து மணிகண்டனையும், அவரிடம் கைப்பற்றிய 760 சி.டி.க்களையும் போலீசார் திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், 10 ஆபாச பட சி.டி.க்கள் உள்பட 760 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் 2–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான சரவணக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments: