Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    

தமிழகத்தில் பெண்சிசு கொலையை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
திருமங்கத்தில் விழிப்புனர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஊர்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள், தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் உட்பட 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை நகரசபை தலைவர் உமாவிஜயன் தொடங்கி வைத்தார். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சியாமளாதேவி தலைமை தாங்கினார். டாக்டர்கள் ராஜகுமாரி சோமசேகர், மாங்கனி ஆகியோர் வரவேற்றனர். மதுரை மாவட்ட மருத்துவ நலப்பணிகளை தொழுநோய் பிரிவு இணை இயக்குநர் ராஜமோகன், பெண் சிசுகொலை தடுப்பு குறித்து பேசினார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஜோசப் வின்சென்ட், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை அதிகாரி டாக்டர் பூமிநாதன் நன்றி கூறினார்.
இணைஇயக்குநர் டாக்டர் ராஜமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகள், 980 பெண் குழந்தைகள் என்ற விகிதாசாரத்தில் பிறக்கின்றன. மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் கொலை குறைந்து, ஆயிரத்திற்கு 990 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறக்கின்றது.
கேரளாவில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்து உள்ளது. அரியானாவில் குறைவாக உள்ளது. மேலும் தொழுநோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை 100 குழுக்களாக பிரித்து ஒரேநாளில், ஒரே நேரத்தில் வீடுகளுக்கு சென்று தொழுநோய் குறித்தும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டியதின் அவசியத்தையும், சிகிச்சை குறித்தும் எடுத்துரைத்தனர்.
திருமங்கலத்திலும், செங்கப்படையிலும் நேரடியாக 25 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழுநோயளிகள் 150 பேர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என்று கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தொழுநோய் பிரிவு மேற்பார்வையாளர்கள் சிவநேசன், பாலகிருட்டினன், முருகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

0 comments: