Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by farook press in ,    
குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குடிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மக்காச்சோளம் மட்டுமின்றி கிணற்று பாசனம் மூலம் சின்னவெங்காயம் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொங்கல் நகரம், குடிமங்கலம், இலுப்பநகரம், பெதப்பம்பட்டி, அணிக்கடவு பூளவாடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்த பகுதிகளில் சின்னவெங்காயம் விலை உயர்வை எதிர்பார்த்து விளை நிலங்களில் வெங்காய பட்டறைகள் அமைத்து இருப்பு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இங்கு விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 35 நாட்களுக்கு பிறகு அதனை தனியாக பிரித்து நடவு செய்தும் மற்ற மாதங்களில் முழு வெங்காயமாக நடவு செய்தும் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி கோபிநாதன் கூறியதாவது:–
சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 1¼ கிலோ விதை தேவைப்படுகிறது. 1 கிலோ விதை ரூ.3 ஆயிரத்து 500–க்கு வாங்கி சாகுபடி செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு பாத்தி அமைக்க ரூ.2 ஆயிரமும், நடவு செய்ய ரூ.4 ஆயிரமும், மருந்து தெளிக்க ரூ.7ஆயிரமும், களைஎடுக்க ரூ.4ஆயிரமும், உரமிடுதல் ரூ.8 ஆயிரமும் மற்றும் அறுவடைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: