Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by Unknown in ,    
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
 மதுரை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருப்பது வைகை அணை. இங்கிருந்து எடுக்கும் தண்ணீர், பண்ணைப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
 இதில் மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கும், 600 தெருக் குழாய்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர 22 லாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 கடந்த ஆண்டில் பருவமழை போதிய அளவுக்கு இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மேலும், மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரும் வறண்டுபோனது. இதனால், கோடையின்போது கடும் தட்டுப்பாட்டு நிலவியது.
 இதைச் சமாளிக்க பல்வேறு இடங்களிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்தது. நடப்பு ஆண்டில் சராசரியையொட்டி மழை பெய்திருந்தாலும், வரும் கோடையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிப் பகுதிக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியது:
 நடப்பு ஆண்டில் பெய்த பருவமழை, முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வரத்தாலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை வைகை அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் இருந்தது. மதுரை மாநகராட்சிப் பகுதியின் குடிநீர்த் தேவைக்காக தினமும் 122 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
 இதில் 115 மில்லியன் லிட்டர் மாநகராட்சிப் பகுதிக்கும், 7 மில்லியன் லிட்டர் சேடப்பட்டி குடிநீர்த் திட்டத்துக்கும் வழங்கப்படுகிறது. இதே அளவில் தண்ணீர் எடுக்கும்பட்சத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளித்துவிடலாம் என எதிர்பார்த்தோம்.
 இந்நிலையில் கடந்த சில நாள்களாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக
 1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை நிலவரப்படி 37.76 அடியாகக் குறைந்துவிட்டது.
 இதேநிலை தொடர்ந்தால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். கோடையில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்றனர்.

0 comments: