Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று டெங்கு விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ சுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கான டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் டவுன்ஹாலில் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவபணிகள் இணை இயக்குனர் தனபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரகுபதி, மாவட்ட கல்வி அதிகாரி முருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி சுசீலா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கேசவன், மாநகர் நல அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசும் போது கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டம் முழுவதும் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு தகவல்கள் மாணவ–மாணவிகள் மூலம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயம் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவத்தை அறிவிக்க வேண்டும். இந்த கஷாயத்தை பிறந்த குழந்தை முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2.5 மில்லியும், 1–3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 5 மில்லியும், 3–7 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு 10 மில்லியும், 7–14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 மில்லியும், 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 மில்லி என நாளொன்றுக்கு 3 நேரம் வீதம் 5 நாட்கள் கொடுக்கலாம்.
விழிப்புணர்வு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்காக 60 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் குடியிருப்புகளில் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட 136 பள்ளிகளிலும், 136 சத்துணவு கூடங்களிலும், 266 அங்கன்வாடி மையங்களிலும் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் மக்கள் அனைவரும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் டெங்குவை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்த சி.டி.க்கள் வழங்கப்பட்டது.

0 comments: