Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
குண்டடம் அருகே உள்ள கொக்கம்பாளையம் பகுதியில் கடந்த 31–ந்தேதி அன்று அதிகாலை ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மறித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச்சென்ற போது மிளகாய் பொடியை வீசி தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் ஓட்டிவந்த பைக்கில் இரும்பு கட்டர், கட்டிங் பிளேயர், இரும்பு வளையம் போட்ட தடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை வைத்து அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரிந்ததால் அவர்களை பிடிக்க குண்டடம் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை கோவை தாராபுரம் ரோட்டில் மேட்டுக்கடை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற ஒருவரைப்பிடித்து விசாரித்தபோது அவர் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பிய ஆசாமி என்பது தெரியவந்தது. அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்லடத்தை அடுத்துள்ள பூராண்டாம்பாளையத்தைச்சேர்ந்த சுப்பிரமணி(45) என்பதும், தற்போது அவர் அவினாசி அடுத்துள்ள வஞ்சிபாளையத்தில் குத்தகைத்தோட்டம் பார்த்து வருவதும் தெரிந்தது. தப்பியோடிய மற்ற 2 பேர் சுப்பிரமணியின் அண்ணன் ரத்தினசாமி(47), அவரது மகன் மணிகண்டன்(19) என்பதும் தெரிந்தது. இவர்கள் இதற்கு முன்பு பல இடங்களில் மோட்டார், கேபிள், காற்றாலை கேபிள், டிராக்டர் ரொட்டாவெட்டர் ஆகியவற்றை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

0 comments: