Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
அம்மான்,
விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர். 
 தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
மூவாத்தை விடுவிக்க, ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கெடு விதித்தனர்.  இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் தீவிரவாதிகள் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.  
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கக்கோரிய பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர்.  இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இவர்கள் இருவரையும் ஜோர்டான் தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது, விமானி அதிகபெண்களை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  
 

0 comments: