Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    

மதுரையை நவீன நரங்கள் பட்டியலில் மதுரையை சேர்த்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியிடம் அளித்தனர்.
சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் எஸ். இரத்தினவேல் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் ஆகியோர் வெள்ளிக்கிழமை இந்த மனுவை அளித்தனர். அதில், 2015- 16-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் முன் ஆலோசனை குறித்து அளித்துள்ள கோரிக்கைகள்:
16 லட்சம் மக்கள் வசிக்கும் மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் போன்ற உலகப் புகழ்பெற்ற தலங்கள் இருப்பதால் சர்வதேச அளவில் ஒரு சிறந்த சுற்றுலா நகரமாக திகழ்கிறது. மதுரை நவீன நகரமாக மாற்றப்பட்டால் இப்பகுதியில் அபரிமிதமான தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருகும். நவீனமயமாக்கப்பட்ட சர்வதேச தொடர்பு உள்ள விமான நிலையம் மதுரையில் இருப்பதால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைக்கு தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. இது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு 21-ம் நூற்றாண்டுக்கு தக்கவாறு அனைத்து நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்திய அளவில் மத்திய அரசு மாற்றிட உள்ள 100 நவீன நகரங்கள் பட்டியலில் மதுரையை அவசியம் சேர்க்க வேண்டும்.
சரக்கு மற்றும், சேவை வரி விகிதங்களை முடிவு செய்வதற்கு முன்னர் தொழில் வணிகத் துறையின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். புதிய வரிவிகிதங்களை நிர்ணயிக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய தொழில் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் உயர் நிலைக் குழுவை உடனடியாக மத்திய அரசு அமைத்திட வேண்டும். தொழில் வர்த்தக சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தா தொகைக்கு சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும்.தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். லாரி வாடகை மீதான சேவை வரியிலிருந்து லாரிகள் மூலம் சரக்குகளை அனுப்பும் அல்லது பெறும் வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும். மாணவர் நோட்டுப் புத்தகங்களுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நோட்டு புத்தகங்களுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர் நோட்டுப் புத்தகங்களுக்கு கலால் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து முடிவுகள் எடுப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்தார்

0 comments: