Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
அமராவதி வனப்பகுதியில் சந்தனக்கட்டை கடத்தல் குப்பலை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் மான், காட்டெருமை, யானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சந்தனமரம் உள்ளிட்ட ஆபூர்வ வகை மரங்களும் அதிக அளவில் உள்ளது. எனவே வனவிலங்குகள் வேட்டையாடப்படாமல் பாதுகாக்கவும், ஆபூர்வ வகை மரங்களைப்பாதுகாக்கவும் வனத்துறையினர் தினசரி ரோந்துப்பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் வனப்பகுதியில் ஏராளமான நவீனரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந்தேதி நள்ளிரவில் அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாபுரம் வனப்பகுதியில் மர்மநபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபர்கள் மாவோயிஸ்டுகளா? அல்லது சந்தனக்கட்டை கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களா? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வனப்பகுதியில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தளிஞ்சி வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து 25–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தளிஞ்சி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு இருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா புலியூரைச்சேர்ந்த காளி(வயது50), கிள்ளியூரைச்சேர்ந்த திருப்பதி (29),கீழுரைச்சேர்ந்த வேந்தன் (26), அதே ஊரைச்சேர்ந்த கோவிந்தராஜ் (26)என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு சந்தனக்கட்டை கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் கேரள மாநிலம் காந்தளூர், காரையூர் சந்தன மரக்காப்புக்காட்டுப்பகுதியிலும் சந்தன மரங்களை வெட்டிக்கடத்தும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் விசாரணைக்காக கேரள மாநில வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து அமராவதி வனச்சரக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.

0 comments: