Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூரில் அடகு கடை வைத்து நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் மறுஅடகு வைக்கப்பட்ட 360 பவுன் நகையை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரியை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி (வயது 42). இவருடைய மனைவி பகுதா (33). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தனர். இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 1,800 பேர் சுமார் 350 பவுனுக்கும் மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23–ந்தேதி அடகு கடையை பூட்டி விட்டு கணவன்–மனைவி இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர். அப்பாஸ் மந்திரியின் கடையில் நகையை அடகு வைத்தவர்கள் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அப்பாஸ் மந்திரி, அவருடைய மனைவி பகுதா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
பின்னர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18–ந்தேதி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பகுதாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், தலைமறைவான அப்பாஸ் மந்திரியை பிடிக்க உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே அப்பாஸ் மந்திரி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். இதன் பின்னர் தனிப்படை போலீசார் பகுதாவை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இவர்கள், தங்களிடம் அடகு வைத்த நகைகளை தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மறு அடகு வைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
பகுதா கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் மறு அடகுவைத்த 315 பவுன் நகையை தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் மீட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பி.என்.ரோடு பிச்சம்பாளையம் புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பகுதா மறு அடகு வைத்த 45 பவுன் நகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டனர். இதுவரை இந்த வழக்கில் 360 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. இந்த நகைகள் விரைவில் கோர்ட்டு மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments: