Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
உடுமலையில் மாற்றுத்திறனாளி மாணவி உள்பட 4 ஆயிரத்து 446 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.

தமிழ் நாட்டில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ்–2 தேர்வுக்காக உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 14 தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 496 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் பள்ளிகளில் அல்லாமல் தனியாக படித்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 114 மாணவ– மாணவிகளுக்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 மையங்களிலும் சேர்த்து மொத்த 4 ஆயிரத்து 446 மாணவ–மாணவிகள் எழுதினர். மொத்தம் 50 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி (எஸ்.கே.பி.பள்ளி) தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.கிருஷ்ணவேணி, வேறு அரசு பள்ளி ஆசிரியரின் உதவியுடன் தேர்வில் பங்கேற்றார்.மாணவி கிருஷ்ணவேணி அதிக நேரம் தொடர்ந்து எழுத இயலாத மாற்றுத்திறனாளி என்பதால் அவர் சொல்கிற விடையை எழுதுவதற்கு அவர் படிக்கும் பள்ளி ஆசிரியரல்லாத வேறு பள்ளி ஆசிரியர் ஒருவரை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்படி வினாவிற்கான விடையை அந்த மாணவி கிருஷ்ணவேணி சொல்ல, சொல்ல அதை எழுதுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் 2 பறக்கும் படை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர், துறை அலுவலர், முதன்மை கண் காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு வினா மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும், பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை சேகரித்து திருப்பூருக்கு கொண்டு சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் ஒப்படைக்கவும் 3 பிரிவுகளாக வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: