Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளைக் கொட்டி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் புகை உருவாகி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர், இத் தீயை அணைத்து, குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால், நல்லாறு மாசுபடுவதுடன் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியது: தினசரி பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. தினசரி 14 முதல் 16 டன் வரை குப்பை சேருகிறது. இதை 80 தள்ளுவண்டிகள் மூலம் வாங்குவதற்காக 25 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து போடுவதற்காக 11 ஆயிரம் குப்பைக் கூடைகளும், சாக்குப் பைகளும் வழங்கப்படவுள்ளன.
இதைப் பயன்படுத்தி மக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதே போல பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை புதிய பேருந்து நிலையம் பின்புறம் கொட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றாக அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

0 comments: