Friday, March 13, 2015

On Friday, March 13, 2015 by farook press in ,    
திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை விளக்கி தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வெள்ளியன்று திருப்பூர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 
அவசர நிலைக் காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உருவானது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். 1975ல் 32 பேருடன் தொடங்கிய இந்த இயக்கத்தில் இன்று எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் என மொத்தம் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இன்று தமிழகத்தில் எழுத்தாளர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் எல்லா எழுத்தாளர்கள், படைப்பாளிகளையும் ஒரே இடத்தில் - திருப்பூரில் - கூட்டி இந்த மாநில மாநாட்டை நடத்துகிறோம். நல்ல மனங்களை உருவாக்க பண்பாடு தேவை. அதில் முற்போக்கு பாரம்பரியத்தை எடுத்துச் செல்லக் கூடியவர்களாக எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இருக்கின்றனர். எந்த மதத்தையும் சாராத இலக்கியங்களாக தோன்றியவை சங்க இலக்கியம். அந்த முற்போக்கு மரபை முன்னெடுத்துச் செல்லும் பணியை தமுஎகச மேற்கொண்டுள்ளது.
தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடைபெற்ற சூழலிலும் கலை இலக்கிய இரவுகளை நடத்தி மக்களை ஒற்றுமைப்படுத்தியது. பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த முடியாத சூழலிலும் பிரச்சாரத்தின் மூலம் தேர்தலை நடத்திட செய்தது தமுஎகச.
முக்கிய பண்பாட்டுப் பிரச்சனைகளில் முகம் கொடுக்கக்கூடியதாக தமுஎகச உள்ளது. எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன், துரை.குணா போன்றோர் மீது தாக்குதல் நடத்திய போதும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படும்போதும் அதை எதிர்த்து உறுதியாக குரல் கொடுப்பது தமுஎகச. கருத்து பலம் இல்லாதவர்கள், கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாததால், நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தனையை நிறுத்தச் செய்வதற்காக அச்சத்தை ஏற்படுத்துவதற்கு இது போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர். இவர்களுக்கு அஞ்சக்கூடியவர்கள் அல்ல எங்கள் எழுத்தாளர்கள்!
முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மநு தர்மத் தந்திரதைத் முறியடிப்போம் என்ற மைய முழக்கத்தோடு திருப்பூரில் நடைபெறும் மாநாட்டை 19ம் தேதி, உலகப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் அய்ஜாஸ் அகமது துவக்கி வைக்கிறார். கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தைச் சேர்ந்த வி.என்.முரளி, மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, திரைப்படவியலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 
20ம் தேதி மாலை திருப்பூர் குமரன் சிலை முன்பாக "எந்த நிலையிலும் எமக்கு மரணமில்லை" என்ற முழக்கத்தோடு புத்தகங்களை உயர்த்திப் பிடித்து கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21ம் தேதி "முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம்!"  என்ற தலைப்பில் டவுன்ஹாலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கில் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் அருள்மொழி, சு.வெங்கடேசன், அருணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 22ம் தேதி மாலை மாபெரும் கலைப் பேரணியும், தமிழகத்தின் சிறப்பு மிக்க கலைக்குழுக்கள் பங்கேற்கும் கலை இலக்கிய இரவும் நடைபெறுகிறது. இவ்வாறு ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.
பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், தமிழகம் முழுவதும் இன்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், நாடகவியல், நாட்டுப்புற கலைஞர்கள், திரைப்படத்துறையினர், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் என தமிழகத்தின் முற்போக்கு அறிவுச் சமூகத்தின் முழுமையான பிரதிநிதிகளாக 560 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பெரியார், அயோத்திதாசர், சிங்காரவேலர் என்ற முற்போக்கு மரபில், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தேசிய இயக்கம் முன்னெடுத்த முற்போக்கு அம்சங்களை பாதுகாத்து வலுப்படுத்தக்கூடிய விதத்தில், இந்த மாநில மாநாடு தமிழக கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்வில், "தமுஎகச 13வது மாநில மாநாடு 2015 திருப்பூர்" என்ற புதிய முகநூல் பக்கத்தை மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார்.
இந்த சந்திப்பில் வரவேற்புக்குழுத் தலைவர் அரிமா மு.ஜீவானந்தம், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் ஆர்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
------------------------
திருப்பூர் சிஐடியு செய்தி
தொழிலாளர் வாழ்வுரிமை கோரிக்கைகளுக்காக
மே மாதம் கோட்டை நோக்கி பேரணி
சிஐடியு மாநிலக்குழு முடிவு
திருப்பூர், மார்ச் 13-
ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம், தொழிலாளர் சட்ட உரிமை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாநிலக்குழுக் கூட்டம் திருப்பூரில் மார்ச் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களை விளக்கி சிஐடியு மாநிலத் தலைவர் .சவுந்தரராசன் எம்.எல்.ஏ., வெள்ளியன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காப்பீட்டு துறையில் பெருமுதலாளிகளை அனுமதிப்பது, நிலக்கரி சுரங்கங்களைத் தனியாருக்கு வழங்குவது என மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. அதேசமயம் தொழில் உறவுச் சட்டங்களை பயன்பாடில்லாத வகையில் நீர்த்துப் போகச் செய்வது, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. இதை எதிர்த்து தொடர் கண்டன இயக்கம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களை அரசின் நேரடி பார்வையில் உள்ள பொறுப்புக்கழகங்களிடம் இருந்து பறித்து நேரடியாக அரசுக்குத் தொடர்பில்லாத வகையில், தனியாருக்கு ஒப்படைக்க வழி செய்யும் விதத்தில், அவற்றை கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் நுழைவாயில்களாக இருக்கும் துறைமுகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.
நோகியா, பாக்ஸ்கான் போன்ற பெரிய மின்னணு நிறுவனங்கள் மூடப்பட்டதால் 25 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கப்பாரோ எனப்படும் ஆட்டோமொபைல் தொழிற்சாலையும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரு பக்கம் மேக் இன் இந்தியா என்று முழங்கிக் கொண்டே, மறுபக்கம் ஆலை மூடல் மூலம் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நோக்கியா ஆலை மூடல் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி அழுத்தமாக கேள்வி எழுப்பியதற்கு, அந்த ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்த ஆலை திறக்கப்பட்டால் அதை வரவேற்போம். ஆனால் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் இல்லை.
தற்கொலை நகரம் திருப்பூர்
திருப்பூரில் 8 மணி நேரம் வேலை என்பது இல்லை. 12 மணி நேரம், 16 மணி நேரம், 24 மணி நேரம் கூட தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாதநிலையில் வாடகை கொடுக்க முடியாமல் உள்ளனர். இது போல் பலவித பிரச்சனைகளில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் முன்னணியில் இருக்கும் நகரமாக திருப்பூர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.தொழிலாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக இந்த நிலை உள்ளது.
நலவாரியம் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட வேண்டும், இந்த விசயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மிக மோசமான தான்தோன்றித்தனமாக உள்ளது. நலவாரிய செயல்பாட்டை ஜனநாயகப்பூர்வமாக மாற்றுவதுடன், சிஐடியுவுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் முந்திரி தொழிலில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கச்சா முந்திரி போதுமான அளவுக்கு இல்லை. எனவே தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள், சாலையோர பகுதிகளில் முந்திரி வளர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு, மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக சட்டசபையில் தொழிலாளர் மானியக் கோரிக்கை விவாதிக்கப்படும் சமயத்தில் மாநிலம் முழுவதும் இருந்து தொழிலாளர்களைத் திரட்டி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் கடைசி வாரத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.
அரசுத் துறைகளில் வேலை நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விசயங்களுக்கு பணம் வாங்கப்படுவதாக ஊடகங்களில் செய்து வருகிறது. இந்த புகார்கள் குறித்து அரசு கவலைப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு செய்து முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., கூறினார்.
இந்த பேட்டியின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: