Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    
பல்லடம் அருகே கொடுவாய் நாகலிங்கபுரத்தில் பசுமை உழவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
  இந்த விழாவுக்கு உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமை வகித்தார். பசுமை உழவர் மன்றப் பொருளாளர் என்.முத்துசாமி முன்னிலை வகித்தார். அதன் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்றார்.
இதில், பசுமை உழவர் மன்றத்தை நபார்டு வங்கியின் திருப்பூர் மாவட்ட உதவிப் பொதுமேலாளர் வி.எஸ்.ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
 திருப்பூர் கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.கணேசன், மாவட்ட நிதி சார் கல்வி மையத்தின் நிதி சார் ஆலோசகர் பி.குப்புசாமி ஆகியோர்  பங்கேற்றனர்.
  இதில், பொங்கலூர் மணிகண்டன் பேசியது.
 திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் உழவர் மன்றங்களை தொடங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். விவசாயிகள்,  வங்கிகள், அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதே உழவர் மன்றத்தின் நோக்கமாகும்.
 விவசாய விளைப் பொருள்களைத் தேவைக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றவும், அவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் உழவர் மன்றங்களே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த மாதத்தில் செயல்படவுள்ளது.
 இனி, விவசாயிகளே விற்பனையாளர்களாக மாறி விவசாயத் தொழிலதிபர்களாக மாறும் சூழ்நிலையை மத்திய அரசும், நபார்டு வங்கியும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
  இதில், உழவர் மன்றத் தலைவர்கள் கே.பி.சுப்பிரமணியம் (கோவில்பாளையம்), ஆர்.பாலசுப்பிரமணியம் (தங்காய்புதூர்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்), கோபாலகிருஷ்ணன் (கவுண்டன்பாளையம்) உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

0 comments: