Tuesday, April 21, 2015

On Tuesday, April 21, 2015 by Unknown in ,    
திருப்பூர் தெற்கு மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரம் உள்ளிட்டோர் மாநகராட்சியைக் கண்டித்துப் பேசினர்.
இதில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மர்மக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காக 6 நாள்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை, 3 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலன வார்டுகளில் 6 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒருநாள் விட்டு அடுத்த நாள் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர்த் திட்ட குழாய்களை விரிவுபடுத்தி கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரை அனைத்துப் பகுதியிலும் முறையாக விநியோகிக்க வேண்டும். புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகயை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைக் கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு, உடனுக்குடன் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கள்ளம்பாளையம் உள்ளிட்ட தெற்கு மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

0 comments: