Wednesday, April 22, 2015

On Wednesday, April 22, 2015 by Unknown in ,    
திருப்பூர் 6வது வார்டு தெற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வருவதில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
6ஆவது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, குப்பன்னகவுண்டர் வீதி உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், இணை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் அனுப்பர்பாளையம்புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  இதில், மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

0 comments: