அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 270க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி ஒராண்டாகிவிட்டது.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், "உங்களை மீட்பதில் நைஜீரிய தலைவர்களும், சர்வதேச சமூகமும் போதிய உதவி செய்யவில்லை. உங்களை மீட்பதற்கு அவர்கள் நிறைய மெனக்கிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் பலரில் நானும் ஒருவர்.
நீங்கள் இதுநாள் வரை தீவிரவாதிகள் பிடியில் சிக்கிக் கொண்டு படும் வேதனைகளை யூகித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால், நாங்கள் உங்களை மறந்துவிடவில்லை. இதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரையும் ஆரத் தழுவி, உங்களுடன் சேர்ந்து இறைவனைத் தொழுது, உங்கள் குடும்பத்தினர் உங்கள் விடுதலையை கொண்டாடும் போது நானும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது சகோதரிகள். அதுவும் துணிச்சலான சகோதரிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
போகோ ஹராம் தீவிரவாதிகளால் நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட ஓராண்டு கடந்ததை நினைவுகூரும் வகையில் ('Bring Back Our Girls') பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ் என்ற பிரச்சாரக் குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.