மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள பெரியார் திடலுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் என்னும் பெயரில் ஒரு சில மதவாத சக்திகள் திரண்டுள்ளனர். அவர்களை தொலைவிலேயே தடுத்திருக்க வேண்டிய காவல்துறையினர் பெரியார் திடலின் வாசல் வரையில் அனுமதித்துள்ளனர்.
இதனால், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் மதவாதசக்திகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெரியார் திடலுக்குள் நுழைய முயற்சித்தவர்களை திராவிடர் கழகத்தினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் திராவிடர் கழகத்தினர் மீது திடீரெனத் தடியடி நடத்தியுள்ளனர். இதில், திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
மதவாத சக்திகளின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைக் அம்பலப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆணாதிக்கத்தின் அடையாளச் சின்னமாக உள்ள தாலியைத் தாங்களே அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு கொள்கை அடிப்படையிலான சனநாயக வழியிலான போராட்ட வடிவமே ஆகும். அதுவும், திராவிடர் கழகத்தின் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று காலையில் இப்போராட்டத்தை நடத்தி முடித்தனர். அதன் பின்னர், தமிழக அரசு மேல் முறையீடு செய்து திராவிடர் கழகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே அப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டது. 21 குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய தாலிகளை அகற்றினார்கள். இது எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமானதல்ல.
அப்போராட்டத்தை நடைபெறவிடாமல் எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர்கள், அது திட்டமிட்டபடி நடந்தேறிவிட்டதால் ஆத்திரத்திற்காட்பட்டிருக்கிறார்கள். இதனால் மாலை 4 மணியளவில் பெரியார் திடலை நோக்கி மதவாத சக்திகள் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்ததாக திராவிடர் கழகத்தினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிற காவல்துறையினர், அவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஏனோ ஈடுபடவில்லை.
காவல்துறையினரின் தடியடியின்போது குறிப்பாக, திராவிடர் கழகத்தினரே குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது வேதனைக்குரியதாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருவரும் மூட நம்பிக்கைகளையும், சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெறும் ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்களாவர். குறிப்பாக, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான ஆதிக்கத்தை எதிர்த்துள்ளனர்.
அந்த வகையில், பெண்களுக்கு அணிவிக்கப்படும் தாலியும் ஆணாதிக்கத்தின் அடையாளச் சின்னம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர். பெண்கள் கல்வி பெறவும், அதிகார வலிமை பெறவும், ஆண்களுக்கு இணையாக சொத்துரிமைகள் பெறவும் வேண்டுமெனக் குரல் கொடுத்துள்ளனர்.
அவர்களின் வழியில் தொடர்ந்து போராடிவரும் திராவிடர் கழகத்தினர் பெண்களுக்கெதிரான ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் தாலி அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இது எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல.
திராவிடர் கழகத்தில் உள்ள குடும்பத்தினர் யாருடைய வற்புறுத்தலோ அச்சுறுத்தலோ எதுவுமின்றி தாங்களே முன்வந்து தங்களுக்குத் தாங்களே தாலியை அகற்றிக்கொண்டனர்.
ஆனால், ‘தாலியை அகற்றிக்கொண்ட பெண்களை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள்’ என்று கொச்சைப்படுத்தும் வகையில் தமது ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவருடைய அநாகரிகமான இந்தப் போக்கையும், இத்தகைய மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.