Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
உடுமலை நகரின் முக்கிய வடிகாலாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடையில் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உடுமலை நகரின் முக்கிய வடிகால்களாகக் கருதப்படும் கழுத்தறுத்தான் ஓடை, தங்கம்மாள் ஓடை ஆகியவற்றைத் தூர் வார வேண்டும், இரு ஓடைகளின் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில், உடுமலை நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், கடந்த சில வாரங்களாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையான கழுத்தறுத்தான் ஓடையை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பழனி சாலையில் தொடங்கி ஐஸ்வர்யா நகர் முதல் ஏரிப்பாளையம் வரையில் உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில் தங்கம்மாள் ஓடையையும் உடனடியாகத் தூர் வாரவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்கள், துணிக் கடைகள், வியாபார நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியிருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வியாழக்கிழமை தொடங்கியது. இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
 நகராட்சி ஆணையர் க.சரவணகுமார், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர்கள் பழனிகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

0 comments: