Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு பூங்கா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தொழிலதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி சார்பில் மேற்கு புறம் 3 ஏக்கரில் நம்பி ஆரூரர் ஆடவர் விளையாட்டுத் திடல், 4 ஏக்கரில் திருஞானசம்பந்தர் சிறுவர், மகளிர் அரங்கம், பூஞ்செடிகள், 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த வளையத்துக்கு வெளியே பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்த 2 ஏக்கரில் மாணிக்கவாசகர் மண்டபம், 4 ஏக்கரில் திருநாவுக்கரசர் பசு மடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
 இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை தொழில் அதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி திறந்து வைத்தனர். உமாசங்கர் தாயார் சந்திராஞானவேல் குத்துவிளக்கு ஏற்றினார்.
 சுப்பிரமணி அடிகளார், திருமுருகநாத சாமி அறக்கட்டளை துணைச் செயலாளர் குப்புசாமி, திருமடம் சுந்தரராச அடிகளார், அப்பர்அடி திருக்கூட்டம் சொக்கலிங்க அடிகளார், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களைத் திறந்து வைத்தனர்.
 கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் விஸ்வநாதன், ருத்ராபிஷேக குழுத் தலைவர் முருகேசன், தொழில் அதிபர் கீதாலயா முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: