Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளின் பாசன நிலங்கள், ஏழுகுள பாசன நிலங்கள், மானாவாரி பாசன நிலங்கள் என உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் விளை நிலங்களாக இருந்தன. இவற்றில் தென்னை, கரும்பு, நெல், காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
ரியல் எஸ்டேட்: சில ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளத்தில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்தத் தொழில் தற்போது பெரிய நிதி நிறுவன அதிபர்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் விவசாய விளை நிலங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. உடுமலை நகரை ஒட்டி உள்ள போடிபட்டி, மானுப்பட்டி, பெரியவாளவாடி, சின்னவீரம்பட்டி, மலையாண்டிக்கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் நல்ல பலன் கொடுத்து வந்த பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, அந்த நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
செங்கல் சூளைகள்: இது ஒரு புறம் இருக்க மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளால் விளை நிலங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடத்தூர், கணியூர், வேடபட்டி, காரத்தொழுவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இப் பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காற்றாலைகள்: உடுமலையின் தெற்கே உள்ள குடிமங்கலம் பகுதியில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் காற்றாலைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இந்தக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களை காற்றாலை நிறுவனங்களிடம் விற்று விட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று வருகின்றனர். மீதமுள்ள சில கிராமங்களில் உள்ள விவசாயிகளும் தங்களது நிலங்களை இந்நிறுவனங்களிடம் கொடுத்து விட்டு வெளியூர் செல்ல முடிவு செய்துள்ளனர்.
பருவ நிலை மாற்றத்தால் மழையில்லாததாலும், பிஏபி தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததும்தான், நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு முக்கியக் காரணம்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தற்போது உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்துவிட்டன. அதாவது நான்கில் ஒரு பங்கு விவசாய பூமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக நிலைப்பயிரான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படியே போனால் விவசாயிகளின் எதிர்காலம் சூனியமாகிவிடும். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு விளை நிலங்களை அழிக்கக் கூடாது என தனியாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றனர்.

0 comments: