Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
திருப்பூரில் சர்வதேசக் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி மே 6-ஆம் தேதி  தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடைக் கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டுக்கான பின்னலாடைகளை தயாரிப்பதற்கு, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெறும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
 இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியது:
 இக்கண்காட்சியில் பங்கேற்குமாறு சர்வதேச அளவில் 2,000-க்கும் மேற்பட்ட  வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகத் தலைவர் வீரேந்தர் உப்பல் துவக்கி வைக்கிறார். இதில், ஃபேஷன் ஷோ, ஏற்றுமதியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பூர், மும்பை, கேரளம், பெங்களூரு, அரியானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கவுள்ளன.
 திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 2012-13-ஆம் ஆண்டில்  ரூ. 13,000 கோடி, 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 18,000 கோடி, 2014-15-ஆம்  ஆண்டில் ரூ. 21,000 கோடி என வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ. 1.60 லட்சம் கோடி. இதில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் ரூ. 21,000 கோடி அளவில் உள்ளது. தமிழக அளவில் 15 சதவீத ஏற்றுமதி வர்த்தகத்தை திருப்பூர் மாநகரம் வழங்கி வருகிறது. தற்போது பின்னலாடை ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்புகிறோம்.
 கனடா நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக,  அங்கிருந்து பின்னலாடை தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் திருப்பூருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனும்  ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 இது போன்ற சாதகமான சூழ்நிலைகளால் அடுத்த 3 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது  என்றார்.

0 comments: