Saturday, May 09, 2015

On Saturday, May 09, 2015 by Unknown in ,    


திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை  பொங்குபாளையம் பாறைக் குழியில் கொட்டவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம  மக்கள் முகக் கவசம் அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளம்பாளையம்  பகுதியில் பாறைக் குழி உள்ளது. இதில், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பை தினமும் லாரிகள் மூலமாக கொட்டப்பட்டு வருகிறது.
  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரக் கேடு ஏற்பட்டுவதாகவும்  புகார் கூறி, இந்தப் பாறைக் குழியில் குப்பையைக் கொட்டக் கூடாது என அக்கிராம மக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்தப் பாறைக் குழியில் பாதுகாப்பான முறையில் குப்பை கொட்டப்படும். குப்பைக்கு மேல் மண் கொட்டப்பட்டு, துர்நாற்றத்தைத் தடுக்கும் வகையில் உரிய மருந்துகள் தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள்  தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
 ஆனால், பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் குப்பையை கொட்டி  வருவதாக அக்கிராம மக்கள் புகார் கூறி, இனி குப்பை கொட்டக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 4-ஆம் தேதி குப்பை லாரிகளை சிறைப்பிடித்தனர்.
   இந்நிலையில், வெள்ளிக்கிழமை பாறைக் குழிக்குள் ஏற்கெனவே கொட்டப்பட்ட குப்பை மீது லாரிகள் மூலமாக மண் கொட்டப்பட்டது.
  அதையடுத்து, லாரிகள் மூலமாக மீண்டும் குப்பை கொட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் முகக் கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து குப்பை லாரிகளையும் திரும்ப அனுப்பி வைத்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார்  உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சமரசம் பேசினர்.
  இது தொடர்பாக சனிக்கிழமை கோட்டாட்சியர் இங்கு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இதற்கு பிறகு உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். அதையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: