Saturday, May 09, 2015

On Saturday, May 09, 2015 by Unknown in ,    




திருப்பூரில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களிடம் பணியாற்றி வந்த லாரி ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த திமுக வார்டு செயலாளர் சிவசுப்பிரமணியம்(55). இவரது மனைவி சாரதாம்பாள் (45), மகள் ஷோபனா (24), மகன் நவீந்திரன் (22). இவர் திமுக இளைஞரணி அமைப்பாளர். சிவசுப்பிரமணியத்திடம் லாரி ஓட்டுநராக ஸ்டாலின் என்பவர் வேலை செய்து வந்தார்.
 இந்நிலையில், மே 5-ஆம் தேதி சிவசுப்பிரமணியத்தையும், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரையும் இரும்புக் கம்பியால் ஸ்டாலின் தாக்கினாராம். இதில்,  ஷோபனா பலத்த காயமடைந்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொடூர கொலைச் சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியான ஷோபனா, கதவை தாழிட்டுக் கொண்டு, உயிர் தப்பியுள்ளார்.
 இது குறித்து 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்டாலினை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்நிலையில், தனிப்படை போலீஸார் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்டாலினை  பிடித்தனர்.
 அவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் செமமங்குடி புளிச்சக்காடி பகுதியைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் என தெரியவந்தது.
 விசாரணையில், சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்தார், வெகுநாள்களாக வேலைக்கு வராமல் இருந்த ஸ்டாலினை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவர் இரும்புக் கம்பியால் அவர்களை அடித்துக் கொன்று, சாரதாம்பாள் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றதாகவும் தெரியவந்தது. போலீஸார், ஸ்டாலினை கைது செய்து, தாலிக்கொடியை பறிமுதல் செய்தனர்.

0 comments: