பிரபல இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் கல்வியாளர் கள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருது ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தியதற்காகவும், கல்வி அனுபவப் பரிமாற்றத்தை மேம்படுத்தியதற்காகவும் வழங்கப்படுவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இதுவரை 70 கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்ற ராவ், பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆய்வு மையத்தின் கவுரவ தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.