Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Unknown in ,    
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ராஜபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலக எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் முத்திரை ஸ்டாம்புகளை நகல் எடுத்து அதேபோல போலியாக சான்றிதழ், முத்திரைகளை தயாரித்துள்ளார்.
இவரது நண்பரான ராஜபாளையம் சர்ச் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் மூலம் 30–க்கும் மேற்பட்டவர்களுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ரமேசை வடக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் விசாரித்ததில், பள்ளி அலுவலர் முத்துப்பாண்டி 102 எண்ணிக்கை கொண்ட மாற்றுச் சான்றிதழ் புத்தகத்தை ரமேசிடம் கொடுத்துள்ளார். சான்றிதழ் கேட்டு வருவோரிடம் சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் பெற்றுக் கொண்டு ரமேஷ் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வந்துள்ளார். சிலர் ஓட்டுனர் உரிமத்திற்காக சான்றிதழ் கேட்டால் ரூ. 8 ஆயிரம் வாங்கிக் கொண்டு சான்றிதழுடன் ஓட்டுனர் உரிமமும் பெற்றுத் தந்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரமேஷ் மீது வழக்குபதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். ரமேசின் வீட்டில் இருந்து 62 நிரப்பப்படாத போலி சான்றிதழ்கள், பள்ளி மற்றும் தலைமை ஆசிரியரின் 3 முத்திரை ஸ்டாம்புகள் மற்றும் ஸ்டாம்ப் பேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சில சான்றிதழ்களில் பள்ளி முத்திரை கொண்ட சீல் பதிக்கப்பட்டிருந்தது. ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் தலைமறைவாக உள்ள பள்ளி அலுவலர் முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.

0 comments: