Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில், நாட்டுக்கோழிப்பண்ணைகள் அமைக்க தொழில்முனைவோர், விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு இறைச்சிக் கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நிகழாண்டில் நாட்டுக் கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த மூலதனமான ரூ.1.29 லட்சம் செலவில் 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம் உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் கொட்டகை அமைக்க 25 சதவீதம் மானியம் அளிக்கப்படும். இதை பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ பண்ணை அமைத்து பயனடையலாம். ஏற்கனவே, இத்திட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பில் பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் பயன்பெற இயலாது.
இதில், விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள், கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

0 comments: