Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் அறிவித்த நான்காவது பைப் லைன் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தனியார் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக மேயரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் அருகே குழாய் பதிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என ஆவணங்களில் இருப்பது தெரியவந்ததால் அந்த இடத்தில் உடனடியாக குழிகளைத் தோண்டி குழாய்களை பதிக்க மேயர் உத்தரவிட்டார். அதன்படி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.
இதுகுறித்து மேயர் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி மாநகர மக்களின் தேவைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 282 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. தனியார் ஒருவர் குழாய் பதிக்கவிடாமல் தடுத்தது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.
முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு: ஆய்வுப் பணிகளின்போது, நாம் தமிழர் என்ற வளாகத்தின் உரிமையாளர் மூன்றாவது பைப் லைனில் இருந்து முறைகேடாக மூன்று இணைப்புகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.

0 comments: