Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    
ஸ்ரீவைகுண்டம் அணையில் அள்ளப்படும் மணலை டெண்டர் மூலம் விற்க திட்டம்: பொதுப்பணித்துறையினர் தகவல்
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வாரும் பணி கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. அங்குள்ள அமலை செடிகளை அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பொன்னன்குறிச்சி பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. 10 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 8 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டது. இதனால் அந்த இடங்களில் ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்தது. மணலை வெளியேற்றுவதற்காக ஏராளமான லாரிகளும் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து தலைவர் அருணாசலம், கவுன்சிலர் பொன்பாண்டி உள்ளிட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆற்றில் அள்ளப்படும் மணல் விபரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் மணல் அள்ளப்படும் விவரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலர் மூலம் கணக்கிடலாம் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மணல் அள்ளும் பணி நடந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 7 பிரிவுகளாக தூர்வாரும் பணி நடக்கிறது. முதல் பிரிவான அணை பகுதியில் 900 மீட்டர் பரப்பளவு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது 2, 3–வது பிரிவான 900 மீட்டர் முதல் 1,700 மீட்டர் வரையிலும் தூர்வாரும் பணி நடக்கிறது. பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 மாதங்களிலும், வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு ஆண்டுக்குள்ளும் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளது.
மழைக்காலத்துக்கு முன்னதாக அணையை தூர்வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், சிறப்பு அனுமதி பெற்று இரவு பகலாக தூர்வாரும் பணி நடைபெறும். அங்கிருந்து அள்ளப்படும் மணலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சேமித்து வைத்து, அரசு டெண்டர் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர்

0 comments: