Monday, September 14, 2015

On Monday, September 14, 2015 by Unknown in ,    
காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டியைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு, நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானிய வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர், முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரிய கண்மாய் மூலம் நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது.
இந்த கண்மாய்கள் நிறைந்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல் விளைச்சல் இருக்கும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்திருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்துடன், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வரத்துக் கால்வாய்கள் தூர்வாராததால் தூர்ந்துபோயும் உள்ளதால், மழைநீரை சேமித்து விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், பெரும்பாலான விளைநிலங்கள் மனையடிகளாக மாறியுள்ளன.
எனவே, இந்தப் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த கம்பிக்குடி-சென்னம்பட்டி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி திட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கர் கூறியது: கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்ததால் விளைச்சல் சரிவர இல்லை. கிணற்றுப் பாசனம் உள்ளவர்களும் நிலத்தடி நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், பொருள்களை விளைவிக்க முடியாமலும் நஷ்டப்பட்டு வருகிறோம்.
இந்தாண்டு மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், மழை நீரை சேமிப்பது கடினமே. எனவே, கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

0 comments: