Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    




சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி  வ.ஜெயராமன் பதவியேற்பு விழா உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், ரயில் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் பொள்ளாச்சி வ.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 44-ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியது:அதிமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் அதை நிறைவேற்றுவதிலும், சட்டப்போரட்டத்தின் மூலம் மாநில உரிமைகளை மீட்பதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமில்லை. பாமர மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அதிமுக அரசை ஆதரித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆறுச்சாமி (உடுமலை மேற்கு), ஆர்.ஜி.ஜெகநாதன்(உடுமலை கிழக்கு), மெட்ராத்தி நா.அண்ணாத்துரை (மடத்துக்குளம்), நகரச் செயலாளர் கே.ஜி.சண்முகம் (உடுமலை) உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

0 comments: