Friday, November 27, 2015

On Friday, November 27, 2015 by Unknown in , ,    



        தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் கிராமத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதியில் வெள்ள சூழ்ந்து கொண்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து 45க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த பெண்கள் குழந்தைகள் என பொதுமக்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு காவல் பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பொன்தேவி, எஸ்.பி.ஏட்டு உட்பட பல காவலர்கள் சேர்ந்து அவர்களை மீட்டு ஜான்பாப்பிக்ஸ் உயர்நிலை பள்ளியில் தங்க வைத்து விட்டு முதலில் தாசில்தார் நா.பா.நாகராஜனை தொடர்பு கொண்டார்கள். தாசில்தரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
உடனடியாக எஸ்.ஐ.பொன்தேவி நிலைமையின் அவசரம் கருதி எஸ்.பி.அஸ்வின் கோட்னிஸிடம் விவரத்தை கூறினார்கள். எஸ்.பி.யின் அறிவுறுத்தலின் படி களத்தில் இறங்கினார்கள் புதியம்புத்தூர் காவல்நிலைய காவலர்கள்.

23.11.2015 முதல் 27.11.2015 வரை தங்கியிருந்த மக்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என நல்ல உணவு மற்றும் சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவ உதவி வழங்கி இன்று வரை மனித நேயத்துடன் உதவி வருகிறார்கள்; புதியம்புத்தூர் காவலர்கள்.

இதுபற்றி, எஸ்.ஐ. பொன்தேவியிடம் தொலைபேசி மூலம் கேட்டதற்கு: எஸ்.பி. ஐயா-வின் அறிவுறுத்தலின்படி எங்களது காவல்நிலைய காவலர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தோம். பின்னர், அப்பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றோம். தனியார் ஜேசிபி மூலமும், தீயணைப்பு துறை மூலமாகவும் வீடுகளை சுற்றியுள்ள வெள்ள நீரை அகற்றி வருகிறோம். என்று கூறினார்.
காட்டு நாயக்க சமுதாய தலைவரிடம் கேட்ட போது: எஸ்.பி.ஐயா தான் எங்களை காப்பாற்றிய சாமி. எங்களது ஊருக்கு வெள்ளநீர் புகுந்ததும் நாங்கள் என்ன செய்வதென்று தவித்து வந்த நேரத்தில், எஸ்.பி. ஐயா தான் எங்களுக்கு, தங்க இடம், சாப்பிட உணவு, குடிக்க தண்ணீர், இலவச மருத்துவ வசதி போன்ற அனைத்து உதவிகளையும் நாங்கள் கேட்காமலேயே செய்து தந்தார். அவர் நூறாண்டு வாழ வேண்டும் என்று மனமாற பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த வேளையில் உதவிக்கு ஓடோடி வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர்களின் செயலை பாராட்டி வருகிறார்கள் பொதுமக்கள். 

0 comments: