Tuesday, December 22, 2015

On Tuesday, December 22, 2015 by Unknown in , ,    
அரசுக் குளங்களில் மணல் எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : அரசு புறம்போக்கு குளங்களில் உள்ள வண்டல்மண், சவுடுமண், கரம்பை மண் மற்றும் சரள் போன்ற சிறுகனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காகப் பயன்படுத்த எவ்வித கட்டணமுமின்றி பொதுமக்கள் எடுத்து பயன்படுத்தவும், அவ்வாறே மேற்படி கனிமங்களை அரசுக்குரிய உரிமக் கட்டணம் செலுத்தி பிறபயன்பாடுகளுக்காக எடுத்துக்கொள்ளவும் புதியவிதிமுறைகளை தமிழக அரசு அரசாணை எண் (எம்.எஸ்) 233 தொழில்துறை (எம்.எம்.சி.2) துறை நாள்: 23.09.2015 மூலம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி ஒரு நபர் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காக கட்டணம் எதுவும் அரசுக்கு செலுத்தாமல் 30 கனமீட்டர், அதாவது 200 கனஅடி கொள்ளளவுடைய 5 லாரிகள், அளவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்ச அனுமதிகாலம் 10 நாட்களாகும். மேற்கண்ட சிறுகனிமங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மட்டுமே மேற்படி கனிமங்கள் எடுக்க அனுமதிக்கப்படும்.

மேற்கூறிய 30 கனமீட்டருக்கு மேலாகவும், பிற பயன்பாடுகளுக்காகவும் அரசுக்குரிய உரிமக் கட்டணம் செலுத்தி மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மேற்படி கனிமங்களை எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசால் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்து, அவர்களால் எடுக்கப்படவேண்டிய கனிமங்களின் அளவை நிர்ணயம் செய்யும்.

நிர்ணயிக்கப்படும் இந்த அளவினை அதிகபட்சமாக 3 மாத காலத்திற்குள் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி வழங்குவார். அரசின் அனுமதி பெறாமலும் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்படாத பிற அரசுக்குளங்களிலும் குவாரி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படுமானால் உரிய குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உரிய அபராதமும் விதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.

0 comments: